
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை தற்போது மோசமாகி இருப்பதால் கோபாலபுரம் இல்லத்திற்கு அரசியல் தலைவர் குவிந்து வருகின்றனர். கருணாநிதி கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது என காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து நேற்று இரவு திடீரென தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் வருகை தந்தனர். பிறகு ஜி.கே.வாசன், திருமாவளவன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் கோபாலபுரம் இல்லம் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் அரசியில் கட்சி தலைவர்களும் படையெடுத்து வருகின்றனர். இன்று க.அன்பழகன், வைகோ உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
பின்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை விரைந்தார். திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் எனக்கு திருமணம் நடத்தி வைத்த கருணாநிதி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என தமிழிசை பேட்டியளித்துள்ளார்.
இதனையடுத்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்த பிறகு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை, அவரிடம் இயற்கை போராடுகிறது என்றார். தமிழக மக்கள் நெஞ்சில் என்றும் கருணாநிதி நிறைந்திருப்பார் என்றார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க சரத்குமார், டி.ராஜேந்தர், வேல்முருகன் ஆகியோர் வருகை தந்தனர். திமுகவை 50 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் கட்டிக்காத்து கருணாநிதி என கூறி டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.