கார்த்திகை மகா தீபம் ஏற்றும் மலைமீது அடியார்கள் ஏறிச் செல்லவும், அன்னதானம் வழங்கவும் தடை…

First Published Nov 8, 2017, 8:08 AM IST
Highlights
Karthikai Maha Deepa mounted on the hill by devotees is prohibited


திருவண்ணாமலை

டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றும் மலை மீது அடியார்கள் ஏறிச் செல்லவும், கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று அருணாசலேசுவரர் கோயிலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா, மா.ரங்கராஜன், கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஆட்சியர், செய்தியாளர்களிடம் கூறியது:

“கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் அடியார்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், அருணாசலேசுவரர் கோயில் நிர்வாகம், காவல்துறை, நகராட்சி உள்பட அனைத்துத் துறைகள் மூலம் ரூ.7.5 கோடி செலவில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு துறைகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலைக்கு வரும் வெளி மாவட்டச் சாலைகள் சீரமைக்கப்படும். தீபத் திருவிழாவுக்காக 16 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். ஒன்பது தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதை சாலையை இணைக்கும் இடங்களுக்கு தொடர் பேருந்துகள் இயக்கப்படும். வனத்துறை சார்பில் 300 பேர், காவல் துறை சார்பில் 9400 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

கிரிவலப்பாதை, சாலைகளில் அன்னதானம் வழங்க அனுமதி கிடையாது. அன்னதானம் வழங்க ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் மட்டுமே அடியார்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும். பல இடங்களில் அன்னதானம் சாலையில் கொட்டப்பட்டு 40 சதவீத உணவு வீணாகிறது. கிரிவலம் வரும் அடியார்கள் அதன்மீது நடக்கும் சூழ்நிலை உள்ளதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இதேபோல, மகா தீபம் ஏற்றும் மலை மீது அடியார்கள் ஏற தடை விதிக்கப்படுகிறது. மலைமீது ஏறிச் செல்ல பயன்படும் ஒன்பது பாதைகளும் அடைக்கப்படும். வயதானவர்கள் மலை ஏறுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அடியார்களின் பாதுகாப்பு கருதியும், மனித உயிரிழப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.ஜானதி, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பழனி, குணசேகரன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

click me!