
கரூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட நீதிபதியாக இருந்த பொழுது, இந்த நாலு ஜெயிலையும் போய் பார்த்தவன் நான். நக்ஸலைட்டுகளோடு கைக் குலுக்கியவன். எனக்கு ஜெயில் என்றால் பயமில்லை. நெப்போலியன் போன்றவன் நான் என சிறை தண்டனை பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குள்ளாகிய நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தம்மை உச்ச நீதிமன்றம் துன்புறுத்தியதாக வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு தொடுத்து அதை கர்ணனே விசாரித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி என்பதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன் அளித்த பேட்டியில்; என்னை கைது செய்ய அவர்கள் பிறப்பித்த உத்தரவை நான் ரத்து செய்துவிட்டேன். உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. அதனடிப்படையில் என் மீதான கைது உத்தரவை ரத்து செய்துள்ளேன். என்னை கைது செய்ய போலீசார் வந்தால், பெயிலுக்கு விண்ணப்பம் செய்வேன்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை கைது செய்ய நான் பிறப்பித்த உத்தரவில், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
பாராளுமன்றத்தின் முன்பு போகத் தான் சொன்னேன். ஆனால், அவர்களோ என்னை கைது செய்து சிறையில் அடைக்க, கொல்கத்தா போலீஸ் கமிஷ்னருக்கு உத்தரவிட்டுள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது. பதவியில் இருக்கும் நீதிபதியை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை.
மேலும், நான் அம்பேத்கரின் தத்துப்பிள்ளை. என் மீதான நடவடிக்கை என்பது, 42 கோடி தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கை.உச்சநீதிமன்றம் ஒரு குத்து குத்தினால், நான் திருப்பி ஒரு குத்து குத்துவேன். இப்படியே போட்டுக்கோங்க..... நான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன். இதுவரை எந்த பதிலுமில்லை என்றார்.