உங்கள் டெல்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது! இபிஎஸ்க்கு மாஸ் பதிலடி கொடுத்த கனிமொழி!

Published : Jun 07, 2025, 09:04 AM IST
kanimozhi admk

சுருக்கம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தளத்தில்: அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும் என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது மு.க.ஸ்டாலினின் இந்த ட்வீட். தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போதே தெரிவித்தது நான். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்.

பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின்

கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை. இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் #Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள். ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள் என தெரிவித்திருந்தார்.

கனிமொழி பதிலடி

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள சமூக வலைதளத்தில்: தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள் எங்களுக்குப் போதித்திட எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை - நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களை அழிப்பவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.

நீங்கள் உங்களையே விற்றுவிட்டீர்கள்

அச்சுறுத்தல் நம்முடைய வீட்டு வாசலில் நிற்கிறது. உங்கள் டெல்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று அவர்களிடம் சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் விரும்பவில்லை. அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். உரத்த குரல் எழுப்புவோம். நீங்கள் உங்களையே விற்றுவிட்டீர்கள். நாங்கள் அப்படி அல்ல என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?