
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காங்கேயம் நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 16,069 பேரும், பெண் வாக்காளர்கள் 16,895 பேர் என மொத்தம் 32,964 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 38 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் தேமுதிக, பாமக இங்கு போட்டியிடவில்லை. 18 வார்டுகளில் போட்டியிட 75 பேர் களம் காண்கின்றனர்.
ஆளும் கட்சியான திமுகவில் சீட் கிடைக்காத பொறுப்பில் உள்ள 5 பேர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். குறிப்பாக திமுகவின் முன்னாள் நகர கழக செயலாளராகவும், ஒன்றிய செயலாளராகவும் இருந்து தற்போது பொறுப்பு குழு உறுப்பினராக உள்ள மணிவண்ணனுக்கு சீட் கொடுக்காமல் அமைச்சர் சாமிநாதன் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் அவர் 15வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினராக சேர்ந்த சூர்ய பிரகாஷ் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டு அவர்தான் நகராட்சி தலைவர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் களம் அதிமுகவிற்கு சாதகமாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில் சுயேட்சையாக போட்டியிடும் திமுகவினரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிற்கு அதிமுகவில் நிலைமை மோசமாக இல்லை என்று சொல்லப்படுகிறது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கேயம் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கேயம் நகராட்சியில் 11 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.