
இப்போதைய பரபரப்பு மெர்சல் படம் பற்றியது. இந்த சந்தடி சாக்கில், மெர்சலை மெர்சலாக்கும்படி சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் உள்ளூர் படமாகத்தான் ரிலீஸானது. அது இப்போது உலகப் படமாக தோன்றும் அளவுக்கு படத்தைச் சுற்றி சர்ச்சைகள் உலா வருகின்றன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது தயாரிப்பாக உருவாகியுள்ள இதில் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என பலர் நடித்துள்ளார்கள்... குறிப்பாக படத்துக்கான இசை ஏ.ஆர்.ரஹ்மான். இவ்வளவு இருந்தும், படம் பேசப்பட்டது என்னவோ அரசுக்கு எதிரான அந்த ஓரிரு வசனங்களுக்காகத்தான்!
பழகிய திரைக்கதை, புளித்துப் போன காட்சிகள், டப்பா சீன்ஸ் என இப்படி இருந்தும் இந்தக் கதையின் பின்னணி என்ன என்பதை கமலை வைத்தே சொல்லி விட்டார்கள் படக்குழுவினர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசனின் இல்லத்துக்குச் சென்றார்கள் மெர்சல் படக் குழுவினர். விஜய், அட்லி ஆகியோரும் கமலைப் பார்க்கச் சென்றனர். அந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
இந்தப் படங்களில், அபூர்வ சகோதரர்கள் திரைப் பின்னணி கொண்ட போஸ்டரின் அருகே நின்று கமலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர் மெர்சல் படக்குழுவினர்.
மெர்சல் படமே அபூர்வ சகோதரர்கள் படத்தின் தழுவல் கதைதான் என்பதாகக் கூறப்படும் வேளையில், அபூர்வசகோதரர்கள்தான் மெர்சல் என்று சொல்லாமல் சொல்லி, பின்னணியின் பின்னணியை இந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக, நெட்டிசன்கள் இதை வைரலாக்கியுள்ளனர்.