
தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட வகை “ரம்” மனித உடல்நலத்துக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கலந்துள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் “ரம்” ஒரு பாட்டிலை யோகேஷ் கபீர்தாஸ் என்பவர் சமீபத்தில் வாங்கினார். தான் வாங்கிய “ரம்” உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படிதான் தயாரிக்கப்பட்டுள்ளதா, தரமானதாக இருக்கிறதா என்பது குறித்து மாநில உணவுப்பாதுகாப்பு ஆய்வுக் கூடத்தில் அளித்து பரிசோதனை நடத்தினார்.
அதில் மனித உடல்நலத்துக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் டார்டாரிக் அமிலம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 2 மடங்கு இருப்பது தெரியவந்தது. இது குறித்து உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளிடம் யோகேஷ் புகார் செய்தார். ஆனால், அதற்குள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடை என்ற அடிப்படையில் வடபழனி டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட்டது. அந்த புகாரையும் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் மூடிமறைத்து விட்டனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த விஜய் என்பவர் கோயம்பேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் “ஆன்சியன்ட் காஸ்க் பரிமியம் டிரிபில் எக்ஸ் ரம்” ஒருபாட்டிலை சமீபத்தில் வாங்கினார். அதன் தரம் குறித்து ஆய்வு செய்ய தஞ்சையில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பினார். அந்த நிறுவனம் அளித்த ஆய்வு அறிக்கையில், அந்த “ரம்” மிகவும் தரமற்றது, மனித உடல்நலத்துக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த “ஆன்சியன்ட் காஸ்க் பரிமியம் டிரிபில் எக்ஸ் ரம்” என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் ரம் காஞ்சிபுரத்தில் உள்ள எலைட் டிஸ்டில்லர்ஸ் தனியார் நிறுவனம் தயாரிப்பாகும். இந்த நிறுவனம் தி.மு.க. கட்சியின் மூத்த தலைவரும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும். இதனால், இந்த நிறுவனத்தின் மீது உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.
இந்த வகை “ரம்”களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், மிக அதிகபட்சமாக டார்டாரிக் அமிலம்(ஆசிட்), அசிடிக் அமிலம், அடிதைலாசிடேட் ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைக் குடிப்பவர்களுக்கு விரைவாக இதய நோயும், குடல்புண், வயிறுதொடர்பான உபாதைகள் விரைவாக வந்து உயிருக்கு ஆபத்தான நிலையை அடைவார்கள்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகம், அடிக்கடி தாங்கள் கொள்முதல் செய்யும் மதுவகைகளின் தரம், குறிப்பிட்ட விதிமுறைகளின்படிதான் மது தயாரிக்கப்படுகிறதா என்ற தரச்சோதனைகளை செய்வதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.