
தர்மபுரி
தர்மபுரியில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் பணம் இல்லததால், கடுப்பான மர்ம கும்பல் எதிர் கடையின் கதவை உடைத்து ரூ.4 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கொய்யாராம் (40). இவர் தர்மபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள அப்துல்முஜித் தெருவில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இவர் புதன்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தார். ஆனால், கடையின் வெளிப்பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.4 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து, மர்மநபர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.
இந்த கடையின் அருகே உள்ள கோபால் என்பவருக்கு சொந்தமான அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள் அந்த கடையில் இருந்த கல்லாவில் பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
இந்த கடைக்கு எதிரே உள்ள பிரேம் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் ஆட்கள் வந்ததால் கடையில் இருந்து வெளியேறிய அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கோபால், பிரேம் ஆகிய இரண்டு பேரின் கடைகளிலும் பணம், பொருட்கள் கொள்ளை போகவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி நகர காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடைகளில் பதிந்திருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவலாளர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் திருடிய மர்மநபர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.