
காரிமங்கலம்
கேத்தன அள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்த்துளை கிணறுகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் கேத்தனஅள்ளி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைகளுக்கென தும்பலஅள்ளி நீர்த் தேக்கத்தில் இருந்து இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த பகுதியில் மற்ற இடங்களை காட்டிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளில் ஒன்று மின்மோட்டார் இன்றியும், மற்றொன்றில் போதிய அளவில் பைப்புகள் இல்லாமல் இருப்பதால் கிராமத்தின் நீராதாரம் முற்றிலும் முடங்கி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமமக்கள் குடிநீருக்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து கிராமத்தின் அனைத்து தெருக்களில் குழாய்களுக்கு செல்லும் இணைப்புகளை அடைத்து விட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடியில் வரிசையாக 14 குழாய்களை அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
“இந்த தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. கிராமமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் தண்ணீர் பிடிப்பதால் அவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறது. எனவே இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் ஆதாரம் உள்ள இந்த இரண்டு ஆழ்த்துளை கிணறுகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கிராமத்தின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கினால் ஒழிய இங்கு நிலவும் கடும் வறட்சியை ஓரளவேனும் விரட்ட முடியும்.