கலைஞர் உலகம் அருங்காட்சியகம்: மார்ச்.6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி - எப்படி அனுமதி சீட்டு பெறுவது?

By Manikanda Prabu  |  First Published Mar 4, 2024, 4:53 PM IST

கலைஞர் நினைவிடத்தில்  அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகம் வருகிற 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது


மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, கடந்த மாதம் 26ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல், கலைஞர் கருணாநிதியின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப்  பொதுமக்களுக்குத்  தெரிவிக்கும் வகையில், அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு  அரங்கங்களுடன்  “கலைஞர் உலகம்” என்ற அருங்காட்சியகம்  அமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த,   கலைஞர் உலகம்  அருங்காட்சியகத்தில்,  கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல்,  அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், கலைஞர் நினைவிடத்தில்  அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகம் வருகிற 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு  நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது - ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!

ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே  வருகைபுரிய வேண்டும்.  கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம்  ஆகும்.

அதேசமயம், கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை. பொதுமக்கள் நேரடியாக நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன மற்றும் புதுமையான  பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தினைப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசிற்கும், அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பினை நல்கி கண்டு களித்திடுமாறு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

click me!