சினிமாவில் ஏதுங்க கந்துவட்டி… சில நடிகர்களால்தான் பிரச்சனை …போட்டுத்தாக்கும் காஜா மொய்தீன்!

First Published Nov 27, 2017, 1:13 PM IST
Highlights
Kaja moideen Exclusive press meet regards Kandhu vatti


தமிழ் திரையுலகில் பைனான்ஸ் வாங்காத தயாரிப்பாளர்கள் யாரும் இல்லை என்றும், அன்புச் செழியனால் இதுவரை தனக்கு எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை என்றும் ஆனால் சில நடிர்களால்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும்  இயக்குநர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக தான் செய்து கொள்வதாகவும், பைனான்சியர் அன்புசெழியன் தன்னை கந்து வட்டி கேட்டு மிரட்டி வருவதாகவும், தனது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் அன்புசெழியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அன்புச் செழியனுக்கு ஆதரவாகவும் திரை நட்சத்திரங்கள் பேசி வருகின்றனர்.

இயக்குநர்கள் பாலா, சீனு ராமசாமி, சுந்தர்.சி., நடிகைதேவயானி, மனோபாலா, விஜய் ஆண்டனி, சரத்குமார் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் அன்புசெழியனுக்கு ஆதரவாக பேசினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சுசீந்திரன், அன்புசெழியனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீன் கந்துவட்டியால் ஒரு முறை தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காஜா மொய்தீன் இன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 18 ஆண்டுகளாக அன்புச் செழியன் தனக்கு நண்பராக இருந்து வருதாகவும், அவரால் தான் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் தான் பண்ப்பிரச்சனையில் இருந்தபோது அன்புச்செழியன்தான்  உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று அவரை தவறாக சித்தரிப்பது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்புசெழியன் குறித்து  இன்று தவறாக பேசுபவர்கள் எல்லாம் அவரால் லாபம் அடைந்தவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படம் எடுக்கும்போது திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டமிட்டு எடுத்தால் நஷ்டம் வராது என்றும் சில  நடிகர்களால் தான் பிரச்சனை வருகிறது என்றும் காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.

தற்போது பெரிய நடிகர்களின் படம்தான் நஷ்டத்தை சம்பாதித்து வருவதாகவும், கந்து வட்டியால் நஷ்டம் வருவது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அன்புச்செழியன் மிகவும் நல்லவர் என்றும், அவரது பெருந்தன்மை யாருக்கும் இல்லை என்றும்  அவர் போன்ற பைனான்சியர்கள் இல்லை என்றால் தமிழ் சினிமாவே ஸ்தம்பித்துவிடும் என்று காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.

காஜா மொய்தீன் ரோஜா கம்பைன்ஸ் சார்பில் வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்தார். நடிகர் கமலஹாசன் நீண்ட நாட்களாக கால்ஷீட் கொடுக்காதால் காஜா மொய்தீனும் அவரது மனைவியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

ஆனால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இதையடுத்து உடனடியாக கமல் தேதிகள் ஒதுக்கி கொடுத்து படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தப்படம் பின்னர் பிரமாண்டமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!