அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்... சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

By Narendran SFirst Published Jan 28, 2022, 7:09 PM IST
Highlights

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 19ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது. இதனிடையே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாணவி பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அந்த வீடியோ எடுக்கப்பட்ட செல் ஃபோன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் மதம் மாற்றம் உள்ளிட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவியின் பெற்றோர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதுரை, விசாரணை முறையாக வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது. மாணவி வீடியோவை எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. தமிழகத்தில் பிரச்னையை உருவாக்கவே மாணவியின் இறப்பிற்கு பிறகு வீடியோ பரப்பப்படுகிறது. உண்மையில் நீதியை விரும்பியிருந்தால் வீடியோவை எடுத்த அன்றே பரப்பியிருக்கலாமே? வீடியோவை ஆய்வு செய்த தடயவியல் துறை அறிக்கை அளிக்க 5 நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர். மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு அரசியலாக்கப்படுகிறது. இவ்வாறு அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

click me!