
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தை, நினைவு இல்லமாக்கும் வகையில், முதல் கட்டமாக, அதை அரசுடமையாக்கும் அறிவிப்பு, இன்று நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்துக்கு பின் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் , போயஸ் கார்டன் ல்லத்தை , நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என, அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதே போன்று ஓபிஎஸ் தரப்பினரும் ஜெயலலிதாவின் போய்ஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்காக அந்த அணியினர் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும், அதிமுக தொடணடர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன் முதல் கட்டமாக, போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கும் திட்டத்தை, இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து, நாளையோ அல்லது நாளை மறுநாளோ அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை வல்லுனர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதே போல் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், பிரம்மாண்டமான நினைவிடம் உருவாக்கவும் தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவையும், விரைவில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.
.