
ஜெயலலிதாவின் சிறப்பு தனி அதிகாரியாக இருந்த இன்னசென்ட் திவ்யா தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது 5 ஆண்டுகளாக துணை செயலாளர் மட்டத்தில் அவருடனேயே பயணித்து வந்தவர் இன்னசென்ட் திவ்யா.
தன்னுடன் இருந்த முக்கிய ஐஏ எஸ் அதிகாரிகளில் ஷீலா பாலகிருஷ்ணனை அடுத்து இன்னசென்ட் திவ்யா மீது மிகுந்த பாசமாக இருந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தனி துணை செயலாளர்களில் ஒருவரான இவர் முதல்வராக இருந்த 5 ஆண்டுகளில் அனைத்து விழாக்களுக்கான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர்.
குறிப்பாக விஐபி வீடுகளில் நடக்கும் திருமணங்களில் போது ஜெ.செல்ல முடியாத சூழ்நிலையில் இன்னசென்ட் திவ்யா தான் நேரில் சென்று பூங்கொத்து, வெள்ளி விளக்குகள் ஜெயலலிதாவின் வாழ்த்து மடல் ஆகியவற்றை கொடுத்து விட்டு வருவார்.
அதே போன்று முக்கிய பிரமுகர் வீட்டு துக்க நிகழ்ச்சிகளில் ஜெ. கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இவர்தான் கலந்து கொள்வார் . அந்த அளவுக்கு ஜெ. விடம் நம்பிக்கை பெற்றவராகவும் இருந்து வந்தார்.
ஜெ. உடல் நலம் குன்றி வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்த போது ஏதோ காரணங்களுக்காக திடீரென நீண்ட நாள் விடுப்பில் மேற்படிப்பை காரணம் காட்டி அமெரிக்கா பறந்து விட்டார் திவ்யா.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் அரசு பணிக்கு திரும்பியுள்ளார். ஜெ மற்றும் சசிகலா நம்பிக்கை பெற்றிருந்த ஷங்கர் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர இதுவரை இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.