
ஜல்லிக்கட்டுக்காக கை கோர்க்க ரெடி….நடிகை கீர்த்தி சுரேஷ் உருக்கம்…
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்,கிரிக்கெட் வீரர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சென்னையில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேசும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கல் தோன்றி முன் தோன்றா காலத்திலிருந்து நம்முடைய தமிழ் வீரர்களுடைய வீர விளையாட்டு மஞ்சுவிரட்டு. இல்லையென்றால் ஜல்லிக்கட்டு.
வாழையடி,வாழையாக நம் தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டு.இதை அழியாமல் பாதுகாக்க வேண்டியது,நம் தமிழர்களின் கடமை.இதற்காக போராடும் எல்லா இளைஞர்களுக்கும் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுடன் சேர்ந்து போராடும் பெண்களுக்கு என்னுடைய தனிப்பட்ட ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.இதற்காக நாம் அனைவரும் கை கோர்ப்போம்.செயல்படுவோம்.வெல்வோம் என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.