மதுரையில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக உயிரிழப்பு... சோகத்தில் முடிந்த திருவிழா...

 
Published : Apr 16, 2018, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
மதுரையில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக உயிரிழப்பு... சோகத்தில் முடிந்த திருவிழா...

சுருக்கம்

jallikattu viewer dead bull attacked in madhurai festivities became tragedy ...

மதுரை

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியை காணவந்த பார்வையாளை காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதில், பங்கேற்ற போட்டியாளர்களில் 60 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

மதுரை மாவட்டம், குலமங்கலத்தில் உள்ள திருராவுத்தம்பட்டி கருப்புசாமி, முனியாண்டி கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக கோயில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தனர்.

காலை 8.30 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை கோட்டாட்சியர் அரவிந்தன் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். 

முதலில் கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. 

சில காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடும் வகையில் சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்களும் காளைகளை பிடித்தனர். 

இதில், ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொய்கைகரைப்பட்டியை சேர்ந்த பாலு (37) என்பவர் உயிரிழந்தார். 

இதேபோல, காளைகள் முட்டியதில் 60 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் செல்போன், சைக்கிள்கள், பட்டுச் சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 3.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 

மொத்தம் 668 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் முடிவில் சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து குவிந்து இருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்.. கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு
ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!