
பொங்கலுக்கு முன்னே ஜல்லிக்கட்டு, மாவட்டம் முழுக்க மஞ்சுவிரட்டு: அ.தி.மு.க. போடும் உள்ளாட்சி கணக்கு.
ஜல்லிக்கட்டு - தமிழர்களின் அடையாளம்! அது உள்ளாட்சி தேர்தல் வருவதன் அடையாளமா?...என யோசிக்க வைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு பின்னும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் வாரக்கணக்கில் தமிழகமெங்கும் நடந்த போராட்டங்களையும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இளைஞர் படை பொங்கி எழுந்ததையும் தமிழகம் மறக்காது.
ஆனால் இந்நிலையில் இந்த வருடம் பொங்கலுக்கு முன்பேயே அதுவும் ஜனவரி பிறந்ததுமே ஜல்லிக்கட்டை துவக்கிவிட்டார்கள். அதுவும் அ.தி.மு.க. அமைச்சர்களின் ஆதரவுடன், அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துவக்கி வைக்க இன்று கெத்தாக நடந்திருக்கிறது ஜல்லிக்கட்டு விழா ஒன்று
இதை அரசியலோடு தொடர்புபடுத்தி பார்க்க துவங்கியுள்ளனர் அரசியல் விமர்சகர்கள். அதாவது உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துத்தான் இந்த வேலைகளை மக்கள் செய்கிறார்கள் என்கிறார்கள்.
அதனால் உள்ளாட்சி தேர்தலில் வென்றாக வேண்டும் எனும் இலக்கோடு இப்போதே இறங்கியிருக்கும் அமைச்சர்கள் அதன் ஒரு நிலையாகவே ஜல்லிக்கட்டை கையில் எடுத்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டை நடத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்புற மக்களிடம் வெகு நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான செலவுகளை அமைச்சர்கள் பெருமளவு ஏற்று செய்வதன் மூலம் அவரைப் பற்றிய அபிமானம் உருவாகும். ஜல்லிக்கட்டு நடத்துகிறேன் பேர்வழியென்று பாத்திரங்கள், டூ வீலர்கள் என குடும்பங்களுக்கும், இளைஞர்களுக்கும் விதவிதமான அன்பளிப்புகளை அள்ளியள்ளி எந்தவித தடையோ, விமர்சனமோ இல்லாமல் கொடுக்கலாம். இதன் மூலம் வாக்காளர்களை மிக துல்லியமாக சென்றடையலாம்.
விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் துவக்கியிருப்பது போல் பல மாவட்டங்களிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஜல்லிக்கட்டுகளை நடத்தப்போகிறார்களாம். ஆக மொத்தத்தில் தேர்தல் ஜல்லிக்கட்டுக்கு இந்த ஜல்லிக்கட்டு வாயிலாக கெத்தாக தயாராகிறது அ.தி.மு.க. என்கிறார்கள்.
ஹும்! என்னம்மா யோசிக்கிறாய்ங்க!