
பாலசரஸ்வதி…சென்னையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என நடத்தப்பட்டு வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததையடுத்து மதுரை அவனியாபுரம்,பாலமேடு, அலங்காநல்லுர் என தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் தகித்து பரவி வருகிறது.
அலங்காநல்லுரில் போரடத் தொடங்கிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இப்போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரியும் சென்னை மெரினாவில் இன்று 3 ஆவது நாளாக போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற நிறைமாத கர்ப்பிணியான இந்த பாலசரஸ்வதி, போராட்டக்காரர்களின் உணர்வுகளைப் பார்த்து மெய் சிலிர்த்துப்போனார்.
சென்னையிலேயே இத்தனை உணர்ச்சியுடன் போராடும் இளைஞர்கள், அலங்காநல்லுரில் எப்படிப்போராடுவார்கள் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு,கடும் சிரமத்துடன் நேற்று அலங்காநல்லுர் வந்த அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றார்.
வயிற்றில் சுமையிருந்தாலும் அதை பெரிதாக நினைக்காமல் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தின் சுமையை தனதாக்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இரவுமுழுவதும் துங்காமல் அலங்காநல்லுரில் போராட்டத்தில் பங்கேற்ற பாலசரஸ்வதி, இன்று அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டு மதுரை தமுக்கம் மைதானம் வந்தடைந்தார்.
அங்கு இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தொடர்ந்து பீட்டாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார்.
தனக்கு தொடர்ந்து வலி இருப்பதாகவும், ஆனால் அதனையும் மீறி போராட்டங்களில் பங்கேற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பாலசரஸ்வதியின் இந்த போராட்டம் இத்துடன் முடியவில்லை…அடுத்து அவரது பயணம் கோவையை நோக்கி…
எந்த நேரத்திலும் பிரசவம் நிகழலாம்…ஆனாலும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற அவரது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பாலசரஸ்வதி ஒரு காளையைப் பெற்றெடுங்கள்… காளைகளை அடக்க..நிச்சயம் அப்போது ஜல்லிகட்டுக்கு தடை இருக்காது… ஏனென்றால் உங்கள் போராட்டம் வீரியம் மிக்கது..