
ஜல்லிக்கட்டு ஆதரவாக தொடர்ந்து 4 வது நாளாவது தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை அலங்காநல்லூரில் ஆரம்பத்தில் இந்த போராட்டம் தொடங்கி தலைநகர் சென்னையில் பூகம்பமாக வெடித்தது. இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவிகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண், பலர் தங்கள் குடும்பத்தோடு தமிழகம் முழுவதும் பங்கேற்று வருகின்றனர்.
இதனால் உலகம் முழுவதிலும் அனைத்து ஊடகங்களும் போராட்டத்தை முன்நிறுத்தி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதனால் அரசு மற்றும் இதர துறை ஊழியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், லாரி, ஆட்டோ, தனியார் பேருந்து அனைத்து ஓட்டுனர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாக தாங்கள் வாழும் இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்காக திரண்டுள்ள இளைஞர்கள் மது அருந்தாமல், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் போராட்டப்பாதையிலிருந்து சிறிதும் விலகாமல், அறவழியில் நடத்தி வருகின்றனர். கூட்டம் அதிகம் காரணமாக சாலையில் போக்குரவத்து நெரிசல் ஏற்படும் போதெல்லாம், போலீசாருக்கு உதவியாக இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சாப்பாடு தண்ணீர், பாட்டல், அவர்கள் ஓய்வு எடுக்க தனி பேருந்து என இலவசமாக வழங்கி உள்ளன. மாணவர்கள் தாங்கள் சாப்பிட்டு வீசிய இலைகள், பேப்பர்கள், வாட்டர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை அவர்களே அப்புறப்படுத்தினர். மாணவர்களின் இந்த அறவழிப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றம் காரணங்களாக அடைப்பட்டுள்ள சிறை கைதிகள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் பீட்டாவை தடை செய்ய வேண்டுமென 450 கைதிகள் தொடர்ந்து சிறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.