
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.
இதைதொடர்ந்து தடையை மீறி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை தடுப்பதற்காக, மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு நேற்று காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது தடையை மீறி காளையை கழற்றிவிட்ட வாலிபர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். பின்னர், 250க்கு மேற்பட்டோரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதனை கண்டித்து, நேற்று முதல் இன்று காலை வரை அலங்காநல்லூர் பகுதியில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
தற்போது, அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களை போலீஸ் சுற்றி வளைத்து நிற்பதாகவும், குடிக்க தண்ணீர் கொண்டு வருபவர்களை தடுத்து நிற்கின்றனர். அவர்களுக்காக உள்ளூர் மக்கள் உணவு பொருட்களை கொடுக்கும்போது, அதையும் போலீசார் தடுத்து, மிரட்டி விரட்டியடிப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில், அலங்கா நல்லூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.