'தடை அதை உடை..!!' - தமிழகம் முழுவதும் இன்று நடந்த ஜல்லிக்கட்டுகள்..!!- ஓர் அலசல்

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
'தடை அதை உடை..!!'  - தமிழகம் முழுவதும் இன்று நடந்த ஜல்லிக்கட்டுகள்..!!- ஓர் அலசல்

சுருக்கம்

இன்று நமக்கு பால் தரும் பசுக்கள், உணவுக்கு வழிவகுக்கும் காளைகள் ஆகியவற்றுக்கு நன்றி சொல்லும் திருநாளே மாட்டுப்பொங்கல் தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாப்பட்டது. காளைகள் விவசாயியுடன் சேர்ந்து வயல்களில் உழைக்கின்றன.குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கும் பால் வழங்குவது பசுக்கள்.மனிதன் இறந்த பிறகும் பால் ஊற்றியே அவனது வாழ்வை நிறைவு செய்கிறோம்.

ஆரம்பம் முதல் முடிவு வரை நம் வாழ்வோடு ஒன்றிப் போன பசுக்களுக்கும் நன்றிக்கடன் தெரிவிக்கவும்,ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உழவர்கள் அதிகாலையிலேயே மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து வழிபட்டு மாட்டுபொங்கல் கொண்டாடுவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இவை உலகப் புகழ் பெற்றது.இதை காண வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருவார்கள்.

உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உள்ளதாக மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். பொங்கல் நெருங்கிய போது ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறி வந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஜல்லிக்கட்டு சாத்தியமில்லை என கூறி ஒதுங்கி விட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை உத்தரவை பெற்றுள்ளது பீட்டா அமைப்பு. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும், சமூக அமைப்பினரும், கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்ப்பாட்டம் போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்க முடியாது என கூறியது. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடியும் நடத்தினர்..

இந்த ஆண்டு தடையையும் மீறி நாங்கள் எங்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்தியே தீருவோம் என இளைஞர்கள் கூறி தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஆந்திராவில்  நேற்று சங்காராந்தி பண்டிகையில் சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம் சேவல் சண்டைக்கு ஆந்திர உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தடை விதித்தது. ஆனால் தடையை பொருட்படுத்தாமல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரில் நடைபெற்ற சங்கராந்தி விழாவில் சேவல் சண்டை நடத்தப்பட்டது. ஆளும் தெலுங்கு சேதம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகந்தி வெங்கடேஸ்வரா ராவ் கலந்து கொண்டு  போலீசார் முன்னிலையில் சேவல் சண்டையை தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலத்தில் உச்சநீதிமன்ற தடையை பொருட்படுத்தாமல் அங்குள்ள இளைஞர்கள் மாடுகளுடன் தீயில் இறங்கினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த போலீசார் தடைவிதித்தனர்.

பல்வேறு தடைகளை மீறி கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாட்டு பொங்கல் தினத்தில் மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தான் உலகப் புகழ் பெற்றது.அங்கு இன்று அதிகாலை தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. அங்குள்ள காட்டுப் பகுதி ஒன்றில் காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்களும் திரண்டனர். அவர்கள் காளைகளை அடக்கினர். தகவலறிந்த  போலீசார் விரைந்து சென்று போட்டியை தடுத்து நிறுத்தினர்.தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்திய கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் தயாளன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை முடக்கத்தான் கண்மாய் ,மதுரை பழங்காநத்தம்,அவனியாபுரம், பாலமேடு, மேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை,திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி, பழனி அடுத்த ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம் கூடலூர், நாகை மாவட்டம்  வலிவலம் கொடியாலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம்புதூர் ஆகிய கிராமங்கள், வேலூர் மாவட்டம் ஊசூர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள பத்மநாபமங்கலம், திருச்சி மணப்பாறை அருகே உள்ள வேங்கைகுறிச்சி ஆகிய இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டன. ஏராளமான மாடுபிடி வீரர்களும், கிராம மக்களும் அந்த பகுதியில் திரண்டனர்.

பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அவர்களுக்கு வேட்டி, பணப்பரிசு வழங்கப்பட்டது.

போட்டி நடந்த இடத்திற்கு போலீசார்  சென்று மஞ்சு விரட்டு நடத்தக்கூடாது என கூறினர். இதனால் போலீசாருக்கும்,மாடுபிடி வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆந்திராவில் சேவல் சண்டை நடத்துவதற்கு தடையிருந்த போதும், போலீசார் பொதுமக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அதுபோல தமிழக போலீசாரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். தமிழகம் முழுவதும் பல கிராமங்களில் ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்களில்  காளைகளை அவிழ்த்து விட்டனர்.அவற்றை இளைஞர்கள் அடக்கினர் மேலும் போலீசார் வருவதற்குள் போட்டியை நடத்தி முடித்தனர். அடுத்த ஊரில் போட்டி நடப்பதாக கூறி போலீசார் சென்ற பிறகு மஞ்சு விரட்டு போட்டி நடத்தப்பட்டது. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலன பகுதிகளில் வீடுகளில் பொதுமக்கள் கறுப்பு கொடியேற்றி இருந்தனர். பாலமேட்டிலும் அனைத்து வீடுகளில் கறுப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

PREV
click me!

Recommended Stories

இந்த தேர்தலில் விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிடலாம் ..! அரியலூரில் சீறும் திருமாவளவன்!
இந்த தேர்தலில் விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிடலாம் ..! அரியலூரில் சீறும் திருமாவளவன்!