
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது அவசியம் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 21 மநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேருராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேருராட்சி உறுப்பினர்கள் என 12,820 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருகின்றனர். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது அவசியம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில அளவிளான விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட அளவிலான விளம்பரங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் மாநில அளவில் வெளியிடப்படும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு, மாநில தேர்தல் ஆணைய ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம், உத்தேசிக்கப்பட்டுள்ள அவ்விளம்பரத்தின் மாதிரி 2 நகல்களோடு உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்படம் வெளியிட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளம்பர எண் மற்றும் நாள் ஆகியவை விளம்பரப்பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.