
திருப்பூர்
மன்மோகன்சிங் ஆட்சியின்போது இராணுவ வீரர் கொலைச் செய்யப்பட்டதற்கு வளையல் போட சொன்னீர்களே, இப்போ மோடி ஆட்சியில் மூன்று முறை இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தாங்க வளையல் மோடியை போட்டுக்க சொல்லுங்க என்று மகளிர் காங்கிரஸ் சார்பினர் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்து இராணுவ வீரர்களைக் கொன்று தலை துண்டித்த விவகாரத்தில் பிரதமர் மோடி எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு வளையல் அனுப்பி வைக்கும் போராட்டம் நேற்று திருப்பூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்தப் போராட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கார்த்தீஸ்வரி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாநில பொதுச்செயலாளர் ராயல் தர்மதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகிளா காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் தாங்கள் அணிந்திருந்த வளையல்களை கழற்றி ஒரு பெட்டியில் போட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகர் மாவட்ட தலைவி கார்த்தீஸ்வரி கூறியது:
“2013–ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்தபோது இராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். அப்போது, ஸ்மிரிதி இரானி, மன்மோகன்சிங்கை வளையல் அணியும்படி கூறினார்.
ஆனால், தற்போது பா.ஜனதா ஆட்சியில் மூன்று முறை இராணுவ வீரர்கள் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை இல்லை.
இதனால், வளையல்களை சேகரித்து சென்னையில் உள்ள மகளிர் காங்கிரஸ் மாநில தலைவிக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கிருந்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு அனுப்பி, பிரதமர் மோடிக்கு அணிவிக்குமாறு தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது” என்று கூறினார்.