
கோவை,
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் 12 சோதனைச் சாவடிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி சரவணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட உணவு வழங்கல்துறை அதிகாரி சரவணமூர்த்தி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 1402 நியாயவிலைக் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளுக்கும் கையடக்க மின்னணு கருவி (பாய்ன்ட் ஆப் சேல்ஸ்) வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் பொதுமக்களின் குடும்ப அட்டை எண், செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கும்போது மின்னணு கருவியில் உணவு பொருட்களுக்கான தொகையை பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் எவ்வளவு பொருட்கள் வாங்கியுள்ளனர் என்ற விவரம் அதிகாரிகளுக்கும், பொருட்களை வாங்கிய பொதுமக்களுக்கும் தெரியவரும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் கையால் எழுதிய விலை இரசீதுகளை பொதுமக்களுக்கு வழங்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்லும்போது கையால் எழுதிய இரசீதுகளை வாங்காமல், மின்னணு கருவிகளில் விலை தொகையை பதிவு செய்ய ஊழியர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
மின்னணு கருவிகளுக்கு தேவையான அளவு மின்சக்தியை சார்ஜ் செய்ய ஊழியர்கள்தான் கவனம் செலுத்த வேண்டும். மின்சாரம் இல்லாததால் மின்னணு கருவி சார்ஜ் செய்யப்படவில்லை என்பன போன்ற காரணங்களை கூறக்கூடாது. இதுதொடர்பாக அனைத்து கடைகளையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த மாதம் முழுவதும் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 68 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சியை சேர்ந்த அசோகன் என்பவர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதிலும் உள்ள 12 சோதனைச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கோவை மாவட்டத்தில் 67 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ரேஷன் கடைகளில் பொதுமக்களின் செல்போன் எண்களை இணைக்கும் பணி 83 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகளை முழுமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்று அவர் கூறினார்.