காவிரி நதி நீர் இருப்பு குறித்து விவரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்...

First Published Jul 2, 2018, 6:22 AM IST
Highlights
Information of Cauvery Water Resources should posted on websites - p.r.Pandian


திருவாரூர்
 
காவிரி நதி நீர் இருப்பு குறித்து விவரங்களை இணையதளங்கள் மூலம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ளது. இதற்கு ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம். 

மிகுந்த மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் கூட்ட நடவடிக்கைகளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கிறோம். காவிரி போராட்டத்திற்கான ஒரு மைல்கல் என்பதை உணர்கிறோம்.

ஆணையம் அரசியல் தலையீடுயின்றி தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக பாரபட்சமின்றி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பின்பற்றி உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் அடிப்படையில் கூட்ட நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கர்நாடகா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் காவிரி அணைகளின் நதிநீர் பங்கீடு, கண்காணிப்பு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். அதனோடு அவ்வப்போது இணையதளங்கள் மூலம் நீர் இருப்பு குறித்த விவரங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிட வேண்டும்.

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையை கொண்டு கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் ஜனவரி இறுதியில் மூடப்பட்டு மே மாதம் இறுதி வரை நீர் சேமிப்பு காலமாக பின்பற்றப்படுகிறது. 

அதனை காவிரிக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களும் கடைபிடிப்பதை உறுதியோடு பின்பற்றிட வேண்டும். மே மாதமே இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் முன்தேதியிட்டு தண்ணீர் பகிர்ந்தளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆணையக் கூட்டம் எடுக்கும் முடிவுகளை பின்பற்றி காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு தனது பெங்களூரு தலைமை அலுவலக செயல்பாடுகளை முதல் கூட்டத்திலேயே தொடங்கி தண்ணீர் பங்கீட்டு நடவடிக்கைகளை செயல்படுத்திட வேண்டும் என்று பாசன சட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை கண்டிப்புடன் பின்பற்றுவதை கண்காணித்திட வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் பாசனத்திற்கு என தனித்துறை உருவாக்குவதை கட்டாயமாக்கிட வேண்டும். 

குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு இனி வாய்ப்பில்லாத நிலையில் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொள்ள மாதாந்திர அடிப்படையில் நமக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்று வழங்குவதற்கு ஆணையம் முன் வர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 

click me!