
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை இயல்பாக இருக்கும், சரியான நேரத்துக்கு, பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் நேற்று தெரிவித்துள்ளது.
வறட்சி நிலை
நாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து நாட்டில் போதுமான மழை பெய்யாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக இயல்பான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபோதிலும், பல மாநிலங்களில் போதுமான மழை இல்லை, இயல்பைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இதனால் கடும் வறட்சி நிலை இருக்கிறது.
எதிர்பார்ப்பு பொய்தது
கடந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழையும் இயல்பு நிலையில் இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அது போதுமான மழையை பொழியவில்லை. கடந்த ஆண்டு 107 சதவீதம் மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த போதிலும், 97 சதவீதம் மட்டுமே பெய்தது.
இயல்புநிலை
இந்நிலையில், இந்த ஆண்டு பருவ மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதன் இயக்குநர் கே.ஜே. ரமேஷ் டெல்லியில் நேற்று கூறுகையில், “ இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். பரவலாக நாடு முழுவதும் மழை பொழிவு இருக்கும். நீண்ட கால சராசரியில் இந்த ஆண்டு 96 சதவீதம் மழை இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.
நீண்டகால சராசரி 96 சதவீதம் முதல் 104 வரை இருந்தால் இயல்பான மழை, 104 முதல் 110 வரை இருந்தால், இயல்பைக் காட்டிலும் நல்ல மழை, 96 சதவீதத்துக்கும் குறைந்தால் அது இயல்பைக் காட்டிலும் குறைவான மழையாகும்.
தென் மேற்கு பருவ மழை எப்போது தொடங்குகிறது என்பது குறித்து இந்திய வானிலை மையத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருக்கும்.