யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

By Manikanda Prabu  |  First Published Aug 11, 2023, 8:17 AM IST

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு வழங்கப்படவுள்ள ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக பல்வேறு திறன் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் 2023 - 24 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் தொடக்கமாக கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Tap to resize

Latest Videos

மௌலானா ஆசாத் நேஷனல் ஃபெல்லோஷிப் திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை: ஒன்றிய அரசு பதில்!

இதையடுத்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக கடந்த மே மாதம் 28 ஆம் தேதி அன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த ஊக்கத்தொகையை பெற ஆகஸ்ட் 11ஆம் தேதி (இன்று) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, யுபிஎஸ்சி தேர்வர்கள் ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!