
புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்து எரிந்த ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கழிவு தொட்டியை மூடும் பணி நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த பல்வேறு நாட்கள் போராடி அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது.
இதைதொடர்ந்து தமிழகத்தில் பதிக்கப்படும் பல்வேறு இடங்களில் ஒஎன் ஜிசிக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை அருகே நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டு உள்ள ஓஎன்ஜிசி குழாயில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிணற்றில் எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.
இதைதொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட வந்த வட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி.யை கிராம மக்கள் முற்றுகையிட்டு கிணறையும், கழிவு தொட்டியையும் மூட வலியுறுத்தினர்.
இந்நிலையில், கறம்பக்குடி வட்டாட்சியர் சக்திவேல், ஆலங்குடி போலீஸ் டிஎஸ்பி அப்துல் முத்தலிப் ஆகியோர் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுகள் சேகரிக்கும் தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்படுகிறது.