
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் மக்களவையில் நிதித்துறை இணை மந்திரி ராதாகிருஷ்ணன் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில்,புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும்,
இந்தியாவின் கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஷ்வர் உள்ளிட்ட ஐந்து முக்கிய நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்மோம் என தெரிவித்துள்ளார்.
புதிதாக அச்சிடப்படும் 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் அளவுகளில் வித்தியாசம் உள்ளது.இந்த புதிய நோட்டுகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் தெரிவித்து உள்ளார்.
அடுத்து சில மாதங்களில் 2000 ரூ நோட்டுகள் கூட செல்லாது என விரைவில் அறிவிக்கப்படும் என பல வதந்திகள் வந்த நிலையில், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.