பெண்ணை அறைந்த போலீசுக்கு வலுக்குது எதிர்ப்பு; சாராய பாட்டில்களை உடைத்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்…

First Published Apr 14, 2017, 6:55 AM IST
Highlights
Impairment woman slaps anti police Demonstration Womens Association of Alcoholism broken bottles


திருவாரூர்

திருப்பூரில் சாராயக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அடித்த காவல் கண்காணிப்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டியில் மாதர் சங்கத்தினர் சாராய பாட்டில்களை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்து 400 சாராயக் கடைகள் தமிழக அரசு அகற்றியது.

இந்த கடைகளை வேறு இடங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி தமிழக அரசு, இந்த சாராயக் கடைகளை தேர்வு செய்த இடங்கள் குடியிருப்பு பகுதிகளாகவும், கோவில், பள்ளிகள் இருக்கும் பகுதிகளாகவும் இருக்கிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் சாராயக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஈஸ்வரி என்ற பெண்ணை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பளார் என்று கண்ணத்தில் அடித்த சம்பவம் சமூக வலைதளங்கள் மூலம் பரவி அனைவரின் கண்டிப்புக்கும் ஆளானார்.

காவல் கண்காணிப்பாளரின் இந்த செயலைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய மாதர் சங்கம் சார்பில் நேற்றூ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாலையில் சாராய பாட்டில்களை உடைத்து துடைப்பத்தால் அடித்தும், பெண்ணை தாக்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இதில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சுஜாதா, மரின்மன்மதன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் பங்கேற்றனர். 

click me!