ரேசன் பொருட்கள் வேண்டாமென்றால் "விட்டுக் கொடுங்கள்" என்கிறார் தூத்துக்குடி ஆட்சியர்...

First Published Apr 18, 2018, 7:02 AM IST
Highlights
If you do not have ration materials give up says Thoothukudi Collector.


தூத்துக்குடி 

ஸ்மார்ட் கார்டுதாரர்கள் தங்களுக்கு தேவையில்லாத உணவுப் பொருட்களை வாங்காமல் இருப்பதற்கு பதிலாக உணவுப்பொருள் வழங்கல் துறையின் ‘விட்டுக் கொடுத்தல்’ என்ற புதிய திட்டத்தை பயன்படுத்தலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 4 இலட்சத்து 71 ஆயிரத்து 857 ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. 

இந்த ஸ்மார்ட் கார்டு அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரேசனில் அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் கார்டு வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்களை ரேசன் கடைகளுக்கு சென்று வாங்குவதில்லை. இவ்வாறு வாங்காத பொருட்களை போலிப் பட்டியல் மூலம் சில ஊழியர்கள் விற்பனை செய்கின்றனர். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. 

இதனைத் தவிர்க்க, உணவுப்பொருள் வழங்கல் துறை ‘விட்டுக் கொடுத்தல்’ என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தில் ஸ்மார்ட் கார்டு அட்டைதாரர் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், கோதுமை ஆகிய உணவுப் பொருட்கள் தங்களுக்கு தேவை இல்லை எனக் கருதினாலோ, அல்லது சில மாதங்களுக்கு மட்டும் தேவை இல்லை என்றாலோ அல்லது சில பொருட்கள் தேவையில்லை எனக் கருதினாலும் இந்தத் திட்டத்தின் மூலம் பொருட்களை விட்டுக் கொடுக்கலாம்.

விட்டு கொடுக்கும் இந்த திட்டத்தால், ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படாது. மேலும், போலிப் பட்டியல் மூலம் ரேசன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். 

இது தவிர எந்தப் பொருளும் தேவை இல்லை எனில், இந்த திட்டத்தின் மூலம் எப்பொருளும் வேண்டாதோர் அட்டையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

இது தொடர்பான தகவல்களை tnepds இணையதள பக்கம் மூலமாகவும் அல்லது அதன் செல்போன் செயலி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

click me!