
இந்தியாவின் பல பாகங்களில் இருந்தது சிலைகளை திருடி அதை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பலை பிடிக்கும் வகையில் தமிழக போலீசுடன் இணைந்து சிபிஐ-ம் செயல்படவுள்ளது.
சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்டு, அதில் தொடர்புள்ள குற்றவாளிகளை வேட்டையாடி பிடித்து வருகின்றனர்..
வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தி சென்று விற்பனை செய்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் சுபாஷ்கபூர். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் என்று பெற்றுள்ள சுபாஷ்கபூர் இது வரை 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 பழமையான சிலைகளை தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனை செய்துள்ளார்.
சிலைகளை திருடி, வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்ல சுபாஷ்கபூருக்கு கூட்டாளிகளாக செயல்பட்டவர்கள், மும்பையைச் சேர்ந்த ஆதித்ய பிரகாஷ், வல்லபா பிரகாஷ், சூர்யபிரகாஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தீனதயாளன், புதுச்சேரியைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன், புஷ்பராஜ், காரைக்குடி கனகராஜ், தினகரன் ஆகியோர் முக்கியமானவர்கள். சுபாஷ்கபூர் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் கடந்த 2005–ம் ஆண்டு 13 பழங்கால சிலைகள் திருட்டு போனது. அவற்றில் 9 சிலைகளை போலீசார் மீட்டு விட்டனர். இவற்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலையும் அடங்கும். மீதி 4 சிலைகள் சேதம் அடைந்து விட்டன. இந்த வழக்கிலும் சுபாஷ் கபூர், அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஆனால் இந்த சிலை கடத்தல் இந்தியா முழுவதும் பரவிக்கிடப்பதால் மத்திய அரசு சிலை கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
பாராம்பரியமிக்க கோவில் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவும், சிபிஐம் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து ஆக்சன் காட்ட உள்ளது சிலை கடத்தல் பிரிவும் சிபிஐம் இணைந்த டீம்.