
புதுக்கோட்டை
பொங்கல் விழாவின்போது நடத்தப்பட்ட அதிக இட்லி சாப்பிடும் போட்டியில் தொண்டையில் இட்லி சிக்கி போட்டியில் கலந்துகொண்ட சமையல் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ளது பாண்டிக்குடி கிராமம். இந்த கிராமத்தில் நேற்று முன்தினம் மக்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடுவது என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதில் ஒரு போட்டியாக இட்லி சாப்பிடும் போட்டியும் நடத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகமான இட்லிகளை சாப்பிடும் நபருக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் போட்டியில் மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் அதே கிராமத்தைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சின்னத்தம்பியும் (42) பங்கேற்றார்.
இதில் அவர் வேகமாக சாப்பிட்டபோது தொண்டையில் இட்லி சிக்கிக் கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில், போட்டி நடந்த இடத்திலேயே சின்னத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார். .
சின்னதம்பிக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். பொங்கல் விழாவில் ஒருவர் உயிரிழந்ததால் பாண்டிக்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியது.