அனைவரையும் அரவணைத்து மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அனைவரையும் அரவணைத்து செயல்படவுள்ளதாக செல்வப்பெருந்தகை.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளுக்கு பெயர் போனது. இதனால், உட்கட்சிக்கு உள்ளேயே நிலவும் பூசல்கள், கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், அனைவரையும் அரவணைத்து மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படவுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் ஓரிரு நாளில் பதவியேற்பு விழா நடைபெறும். என் மீது நம்பிக்கை வைத்து சட்டமன்றக் கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமித்தார். இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக என்னை நியமித்துள்ளார்கள். அதற்கு, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப காந்தி வழியில் காந்தி சமாதியில் இருந்து பணியை தொடங்கியிருக்கிறோம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அனுபவம் உள்ள தலைவர்கள் காங்கிரஸில் உள்ளார்கள். கட்சியை உயிர்போடு வழிநடத்தும் தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள். அனைவரையும் அரவணைத்து தொண்டர்களின் கனவுகளை அனைவரும் நிறைவேற்றுவோம். மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன்.” என்றார்.
மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை!
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. இதில், கூட்டணியில் ஒதுக்கி இருந்த பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என பலர் டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்.