வாக்குச்சாவடிகள் எப்படியெல்லாம் அமைக்கலாம்? அரசியல் கட்சியினருடன், ஆட்சியர் கருத்து கேட்பு கூட்டம்...

First Published Jul 14, 2018, 7:02 AM IST
Highlights
How to set voting booth political parties and Collector opinion meeting


வேலூர்
 
வேலூரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகள் குறித்து ஆட்சியர் ராமன் தலைமையில் அரசியல் கட்சியினருடனான கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.

கடந்த 2-ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி வேலூரில் மொத்தம் 3454 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இந்த வரைவு வாக்குச்சாவடிகள் குறித்த ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் 10-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் மனுவாக கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து 21 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 17 மனுக்கள் ஏற்கப்பட்டு, 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகள் குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் ராமன் தலைமைத் தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர், "அனைத்து தாசில்தார்களும், மண்டல அலுவலர்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். 

வாக்குச்சாவடி மைய கட்டிடம் பழையதாக இருந்தால் உடனே மையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒரு மையத்தில் அதிகபட்சமாக 1400 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால்தான் வாக்குச்சாவடி மையத்தை பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குச்சாவடிகள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்க இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லாமல் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். 

எந்தவொரு அரசியல் கட்சியினரும் குறை கூறாத அளவுக்கு வாக்குச்சாவடி மையத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் வேலூர் உதவி ஆட்சியர் மேகராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் நாராயணன் (தேர்தல்), சண்முகநாதன் (பொது), தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம், அனைத்து தாசில்தார்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். 

click me!