விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் 28 வரை தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று விண்ணப்பங்கள் வழங்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்ஙள் வழங்கப்படாமல் விடுபட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று விண்ணப்பம் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அதற்கு முன்னதாக இத்திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை பெற விரும்பும் பெண்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகள் மூலமாகவும் முகாம்கள் நடத்தியும் அனைவருக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடைபெறும். மண்டல வாரியாக 150க்கும் அதிகமான குழுக்கள் இத்திட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்றார்.
முதல் கட்டமாக நடந்த முகாமில் சென்னையில் மட்டும் 4.7 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். மேலும், இதுவரை மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை கிடைக்காமல், விடுபட்டவர்களுக்கும் ஆகஸ்ட் 17 முதல் 28 வரை தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.