
கிருஷ்ணகிரி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி தமிழ்நாடு அனைத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநாடு நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அனைத்து துறை ஊழியர் சங்க போராட்ட குழு சார்பில் மாநாடு நடைப்பெற்றது.
“புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய பயனளிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அனைவருக்கும் 20% இடைக்கால நிவாரணம் 2016 ஜனவரி முதல் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்புற நூலகர், கணினி இயக்குனர் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் மற்றும் சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப் போகிறோம் என்று அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டிற்கு போராட்டக்குழு மாவட்ட அமைப்பாளர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரபாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பெருமாள் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் நடராஜன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இதில், பல்வேறுச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் புகழேந்தி நிறைவுரை ஆற்றினார்
மாநாட்டின் முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் நன்றித் தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.