இவ்வளவு விதிமுறைகளை போட்டால் நாங்கள் எப்படி எருது ஓட்டத்தை நடத்துவது - ஆட்சியரிடம் கோரிக்கை...

First Published Jan 22, 2018, 10:07 AM IST
Highlights
How can we celebrate ox run if put such rules - request the collector


கிருஷ்ணகிரி

எருது ஓட்டத்திற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தமிழர் வீர விளையாட்டு முன்னேற்றச் சங்கத்தினர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

எருது ஓட்டம்

பொங்கல் திருவிழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எருது ஓட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்தப் போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எருதுகள் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எருதுகள் கலந்து கொள்ளும்.

விதிமுறைகள் விதிப்பு

இந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற சில எருது ஓட்ட நிகழ்வில் அறிவித்தபடி வெற்றிபெற்ற எருதுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படாததால் இந்தாண்டில் எருது ஓட்ட நிகழ்வுக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் பரிசுத் தொகை அறிவிக்கக் கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.

எருது ஓட்டம் தடை

இதனால், பல இடங்களில் எருது ஓட்டம் நிகழ்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து எருது ஓட்டத்துக்கான விதிகளை மாவட்ட நிர்வாகம் தளர்த்த வேண்டும் என்று தமிழர் வீர விளையாட்டு முன்னேற்றச் சங்கத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விதிகளை தளர்த்த கோரிக்கை

அந்த மனுவில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், எருது ஓட்டம் நடத்தப்பட்டு, பரிசுத் தொகைகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

எனவே, இந்த தடையை தளர்த்த வேண்டும். எருது ஓட்ட நேரத்தை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்க வேண்டும். அரசிதழில் இடம் பெறாத கிராமங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!