
திருத்தணி - அரக்கோணம் சாலையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜெ.இராதாகிருஷ்ணன் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அப்போது பேசியதாவது:
”இந்தியாவில் 18 மாநிலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். (உப்புகரைசல்) வைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் வெயிலில் அதிகமாக வேலைச் செய்யும்போது, நீர்ச்சத்து ஆகாரம், தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
வெயிலின் தாக்கத்தால் தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், குடிநீரை சேமித்து வைக்கும்போது, பாதுகாப்பாக அதனை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் டி.சௌந்தர்ராஜன், ஜெயா பொறியியல் கல்லூரி தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.