
நாகர்கோவில், வட சேரியை அடுத்த கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் ரெஜிவிமல், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், நான் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறேன். தினமும் வேலைக்கு செல்லும்போது, எங்கள் வீடு அருகில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் என்னை சந்தித்து காதலிப்பதாக கூறினார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.
அவரது ஆசை வார்த்தையில் மயங்கி நானும் அவரை காதலித்தேன். பின்னர் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்தோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன். இது பற்றி வாலிபரிடம் கூறினேன். உடனே அவர் என்னை கன்னியாகுமரியை அடுத்த லீபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கினோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற நான் வீடு திரும்பாததால் என் நான் தனியாக தங்கி இருக்கும் தகவலை தெரிந்துகொண்டனர். உடனே என்னை தேடி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து விட்டனர். அங்கு நான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர்கள் என்னை அழைத்து கொண்டு கன்னியாகுமரி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். அங்கு போலீசார் என்னையும், என் காதலனையும் அழைத்து விசாரித்தனர். அப்போது என் காதலன், என் கருவில் வளரும் குழந்தைக்கு நான் தான் தகப்பன் என்றும், என்னை உடனே திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னார். இதை போலீசார் எழுதி வாங்கி கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு வீட்டுக்கு வந்த என் காதலன் திடீரென வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை. இப்போது நான் யாருமின்றி தனியாக தவித்து வருகிறேன். என்னையும், என் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க, என் காதலனை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.