தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். காய்ச்சல் மற்றம் சளி தொல்லையால் பாதிக்கப்பட்ட இளங்கோவன் கடந்த மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையில் உள்ள இளங்கோவனை முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
வெண்டிலேட்டர் உதவியோடு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த திருமகனின் மறைவைத் தொடர்ந்து இளங்கோவன் அந்த தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.