வருவாய் இழந்து தவிக்கும் மலைகிராம மக்கள்…

 
Published : Nov 21, 2016, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
வருவாய் இழந்து தவிக்கும் மலைகிராம மக்கள்…

சுருக்கம்

பருவ மழை பொய்த்ததால், மலையூரில் செடியிலேயே சீதா பழங்கள் கருகிப் போனதால், இந்தாண்டு அந்தக் கிராம மக்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு நிவாரண உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அந்த ஊர் மக்கள் கேட்டுக் கொண்டனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்டது மலைக் கிராமமான மலையூர். இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3200 அடி உயரத்தில் உள்ளது. 

இந்தக் கிராமத்தில், 170 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் குறைந்தபட்சம் சுமார் முக்கால் ஏக்கர் முதல் அதிகபட்சம் சுமார் 3 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர்.

முற்றிலும் மலைப்பகுதியான இங்குள்ள வனப் புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களில் இயற்கையாக சீதா பழங்கள் விளைகின்றன. பல ஏக்கர் பரப்பளவில் இந்தப் பழங்கள் விளைகின்றன. அதிக சுவையிடையது என்பதால், இவற்றிற்கு சந்தையில் தனி மதிப்பு.

பொதுவாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீதா பழங்கள் அறுவடை தொடங்கிவிடும். நவம்பர் இறுதிக்குள் முடிந்துவிடும். நல்ல தரத்தில் உள்ள பழங்கள் கிலோ ரூ.20 வரை மொத்த வியாபாரிகள் மலையூருக்கே நேரடியாக வந்து வாங்கிச் சென்று, அங்கிருந்து தமிழகத்தில் கோவை மற்றும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பர்.

இவ்வாறு அதிக விளைச்சல் இருக்கும்போது, வாரம் ஒன்றுக்கு சுமார் 20 டன் பழங்கள் வீதம், இப்பருவம் முடியும் வரை சுமார் 300 டன் பழங்கள் கிடைத்தன. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது. இந்த வருவாய் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் பேருதவியாக இருந்து வந்தது.

குறிப்பாக, மலைக் கிராமப் பெண்கள் இந்த வருவாய் மூலம் அதிக அளவு பயன்பெற்று வந்தனர்.

இந்த நிலையில், நிகழாண்டு பருவ மழைப் பொய்த்துப் போனதால், செடிகளில் பூத்த காய்கள் அனைத்தும் கனியாமல், நீரின்றி கருகிப் போனது. மேலும், மானாவாரியாக இங்கு விளையும் மல்லிகைச் செடிகளும், அதேபோல, சிறுதானியப் பயிர்களும் நீரின்றி கருகிப் போனது. இதனால் காலம், காலமாக தங்களுக்கு கிடைத்து வந்த வருவாய், இந்தாண்டு இழந்து பொருளாதாரப் பிரச்சனையால் மலையூர் கிராம மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குக் கூட செல்லாமல் இருந்த இக்கிராம மக்கள், தற்போது சுமார் 20 முதல் 30 பேர் வரை இப்பணிக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கூறியது, “மலையூரில் தண்ணீர் பாசன வசதி கிடையாது. நிகழாண்டு மழையின்மையால், நிலத்தில் விதைத்த சிறுதானிய பயிர்கள் காய்ந்து விதைக் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, மல்லியும் காய்ந்து போனது. இயற்கையாக எங்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் சீதா பழங்களும் கருகிப்போனது. இதனால், நாங்கள் வருவாய் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளோம். எனவே, எங்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.

 

PREV
click me!

Recommended Stories

ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு