பொன்மாணிக்கவேல்க்கு எந்த தொல்லையும் கொடுக்கக் கூடாது... தமிழக அரசை எச்சரித்த ஹைகோர்ட்!

By sathish kFirst Published Nov 26, 2018, 8:00 PM IST
Highlights

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா, வேணு சீனிவாசன், கிரண் ராவ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரானார் பொன்மாணிக்கவேல். இன்னும் 4 நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள தனக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாகவும், ஓய்வு பெறுவதற்கு முன் தன்னைப் பழி வாங்கும் நோக்கில் பொய் வழக்குப் பதிவு செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர் நீதிபதிகள். பின்னர், முன்ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

click me!