வேத பாராயணம் பாடுவது வடகலையா? தென்கலையா? பிரச்சனையை தீர்த்து வைத்தது உயர்நீதிமன்றம்!!

By Narendran SFirst Published May 17, 2022, 9:00 PM IST
Highlights

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வேத பாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வேத பாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சி, வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதி அளித்து கோவில் உதவி ஆணையர் கடந்த 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், வடகலை பிரிவினரையும் வேத பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுத்தது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவில் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்த மே 14 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மே.17ம் (இன்றைய) தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வடகலை பிரிவினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கோவில் விழாக்கள் மீது அறநிலையத் துறைக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது, இரு தரப்பினரையும் பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஒரே கடவுளை வழிபடும் இரு பிரிவினருக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 மாதங்கள் வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். தென்கலை பிரிவினர் தரப்பில், முந்தைய ஆண்டுகளில் இரு போல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புதிதல்ல. கோவில் உதவி ஆணையர் உத்தரவை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது. வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஏதேனும் குறை இருந்தால் அறநிலையத் துறை இணை ஆணையர், ஆணையரிடம் தான் முறையிட முடியும். வடகலை பிரிவினருடன் கலந்து பேசிய பிறகு தான் உதவி ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று தென்கலை பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில், விழாவை முறைப்படுத்தவும், ஊர்வலங்களில் தடை செய்யப்பட்ட பாடல்களை பாடியதுடன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாமல் தடுத்ததாலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும். இதனை கோவில் உதவி ஆணையர் முறைப்படுத்த வேண்டும். தென்கலை பிரிவினர் முதலில் ஸ்ரீ சைல தயாபத்ரம் வாசிக்கவும், அதன்பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபத்ரம் வாசிக்கவும், அதன் பின்னர் தென்கலை, வடகலை, பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும். அதன் பின்னர் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாலி திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகம் வாலி திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விரிவான ஏற்பாடுகளை உதவி ஆணையர் மேற்கொள்ளவும், இந்த நடைமுறைகளை வீடியோ பதிவு எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 25 ஆம் தேதி ஒத்திவைத்தார். 

click me!