புரட்டி எடுக்கும் மழை…! அரசின் அறிவிப்பால் 'அப்செட்' ஆன பள்ளி மாணவர்கள்….

By manimegalai aFirst Published Nov 1, 2021, 7:25 AM IST
Highlights

கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களுக்கு பலத்த மழை கொட்டி வருகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தொடரும் மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்கள் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

நிலைமையை ஆய்வு செய்த அரசாங்கம் உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கனமழையின் காரணமாக ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரத்தில் 100 சதவீதம், ஆறு, ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. விடிய, விடிய கொட்டிய மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு பல பகுதிகளில் மின் வினியோகமும தடைபட்டது.

தென்மாவட்டங்களிலும் மழை விட்டபாடில்லை. தொடர் மழையால் ஒரு மகிழ்ச்சி என்றாலும் மறுபக்கம் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். பலத்த மழைக்கு கடலூர் மாவட்டம் மீண்டும் சிக்கியுள்ளது. அதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து உள்ளது

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மழையால் பள்ளிகள் திறப்பு இல்லை என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதே போல விழுப்புரத்திலும் மழை கொட்டி தீர்க்கிறது. பலத்த மழையால் ஆங்காங்கே மின் வினியோகமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நெல்லையிலும் மழை ஓயவில்லை. விடாது பெய்து தீர்த்த மழையால் அம்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழை காரணமாக கள்ளக்குறிச்சியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர் மழையின் காரணமாக நெல்லையிலும் இன்று  மட்டும் பள்ளிகளுக்கு லீவு விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலூரிலும் மழை கொட்டோ, கொட்டு என்று கொட்டுவதால் அம்மாவட்டத்துக்கு இன்று பள்ளிகள் திறப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையிலும் பரவலாக மழை பெய்து மக்களின் தீபாவளி பண்டிகை ஆர்வத்தை குறைத்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. ஆனால் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீண்டநாட்க்ள் கழித்து பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே கனமழை இன்றும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர் மாவட்டஙகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. தொடர் மழையால் குமரிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

click me!