மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த பேய்மழை….வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பக்தர்கள்….

Asianet News Tamil  
Published : Jun 10, 2018, 06:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த பேய்மழை….வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பக்தர்கள்….

சுருக்கம்

heavy rain in west ghat hills area and flood

நெல்லை அருகே கோவிலுக்குச் சென்ற 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டனர்.

தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நீலகிரி, கோவை கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது,

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜை நடைபெறும். இதில் நெல்லை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதிலும் தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமை பூஜை விமரிசையாக நடைபெறும்.

இந்நிலையில் நேற்று வைகாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால் நம்பி கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வந்தனர்.அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் நம்பி கோவிலுக்கு செல்லும் தரைமட்ட தாம்போதி பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் நம்பி கோவில் பகுதியில் சிக்கி கொண்டனர். அவர்களால் தரைமட்ட பாலத்தை கடந்து வர முடியவில்லை.

இது குறித்து  தகவல் அறிந்த மாவட்ட வருவாய் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் சிக்கி நம்பி கோவில் பகுதியில் தவித்த பக்தர்களை தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி ஒவ்வொருவராக மீட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களை பத்திரமாக மீட்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். பக்தர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மறு கரைக்கு கொண்டு வந்தனர்.

திருக்குறுங்குடி, மாவடி, ராஜாபுதூர், மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள தாமரை குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீரானது செங்குளாகுறிச்சி குளம், தோழான்குளம், புலியூர்குறிச்சி குளம், வடுகச்சிமதில் குளம், திருவரங்கநேரி குளம் ஆகிய குளங்களுக்கு சென்றது.

இதேபோன்று திருக்குறுங்குடி பெரிய குளமும் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக உள்கட்சி மோதல் குறித்து கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசம்! | K.A. Sengottaiyan | TVK
கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்