
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களுமே மழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் தமிழகத்துக்கு இனிமேல்தான் மழையே என வானிலை வல்லுநர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவியது. மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது.
இந்நிலையில் தான் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. தொடக்கத்தில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டுமே பெய்த வந்த மழை, பின்னர் தமிழகத்திலும் பெய்யத் தொடங்கியது.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்தமழை பெய்து வருவதால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் பாலாற்றில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கிருஷ்ணகிரி அணையின் முழு கொள்ளளவான 52 அடி முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் அணைக்கு 9,028 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி , தர்மபுரி, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று மாலையில் இருந்து பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில்,குலசேகரம், பேச்சிப்பாறை, மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களுமே மழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் தமிழகத்துக்கு இன்மேல்தான் மழையே என வானிலை வல்லுநர்கள் அடித்துக் கூறுகின்றனர்.