
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை வரை தமிழகத்தில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் மீண்டும் விட்டு, விட்டு கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மீனம்பாக்கம் பகுதியில் பெய்து கனமழை காரணமாக சென்னையில் இருந்துடெல்லி , மும்பை, திருவனந்தபுரம் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன,
கனமழையால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமணியில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் சிறப்பு பள்ளியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அண்ணா பல்கலைகழகத்தில் திட்டமிட்டபடி இன்று அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
கடலூர் மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் இரவு முதல் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. தலைஞாயிரில் அ திகப ட்சமாக 27 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யத்தில் 16 சென்டிமீட்டர் மழையும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் 12 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
இதே போல் திருவள்ளூர், விழுப்புரம், கடலுார்,உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நாளை வரை கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளது.