
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம்,புதுவையில் வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட 59% அதிக மழை பெய்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை 45 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என கணித்திருந்த நிலையில் 71 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 59% அதிக மழை அளவாகும். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக மழை பொழிவு இருந்தாலும் நவம்பர் மாதம் முதலே மழையின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியது. அப்பொழுதே 70 சதவிகிதம் அளவிற்கு மழை கூடுதலாக பெய்ததாக வானிலை மையம் அறிவித்திருந்தது. டிசம்பர் மாதத்தில் சற்றே ஓய்வெடுத்த மழை இறுதியில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்து விட்டது.
சென்னையில் பல பகுதிகளில் 20 செமீக்கு மேல் மழை அளவு பதிவாகியுள்ளது. ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 59% அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 10 மணி நேரம் மழை விடாமல் பெய்துள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது. அங்கு மாட்டு 237.10 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 230.80 மிமீ மழை பெய்துள்ளது.
மேற்கு மாம்பலத்தில் 220 மிமீ மழை பெய்து உள்ளது. இந்த 3 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. இதேபோல் இன்று காலையில் இருந்து நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒன்றிரண்டு இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், புதுச்சேரி காரைக்கால், விழுப்புரம், கடலூர், தஞ்சை, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.