
தென் இலங்கை மற்றும் அதனை சுற்றி உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் லட்சதீவை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வட தமிழகத்திலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சியுரம், நாகை, கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
ஆனால் தென் மாவட்டங்களில் இந்த ஆண்டும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஏரிகள், குளங்கள் இன்றும் வறண்டு காணப்படுகின்றன. பொது மக்களும், விவசாயிகளும் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகம் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில், நிலை கொண்டுள்ளது. இது, தென் மேற்காக நகர்ந்து, லட்சத்தீவு அருகே, அரபிக்கடலில் நுழைந்து வலுவிழக்கும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட வடதமிழகத்திலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும், சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும். அதையொட்டிய, மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்துள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருவண்ணாலை, நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் : விழுப்புரம், ஜானகிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நாகை: நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கோடியக்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை